வெள்ளி, 13 மார்ச், 2009

தொகுதிகள் மறு சீரமைப்பு ஒர் அலசல்

மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி 2006ம் ஆண்டில் தொடங்கி 2008ம் ஆண்டு வரையில் நடைபெற்று முடிந்தது. இந்திய அரசு நியமித்த ‘தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’ இதற்கான பணிகளை மேற்கொண்டது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் தொகுதிகள் வாரியாக ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில்தான் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்து, முதலில் வரைவு பட்டியல் 2007ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியிட்டது தேர்தல் கமிஷன். அதன் பிறகு இறுதிப் பட்டியல் வெளியானது.


2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை 6 கோடியே 24 லட்சத்து 5 ஆயிரத்து 679 பேர். ஒரு தொகுதிக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 691 பேர் என்ற அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வரைவு பட்டியலில் திருவல்லிக்கேணி, சாத்தான்குளம், பத்ம‌நாபபுரம் உட்பட பல தொகுதிகள் வேறு தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. வரைவு பட்டியல் வெளியிட்ட பிறகு கருத்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் என்று பலரும் அந்த கருத்தாய்வு கூட்டங்களில் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

இதற்கு பிறகு வரைவு பட்டியலில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசித்தது. தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மறுவரையறை ஆணையத்தின் தலைவர் குல்தீப் சிங் ஆகியோர் தலைமையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆகியோர் 3 கட்டங்களாக விவாதித்தனர். இதன்முடிவில், தொகுதிகளின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. மறு சீரமைப்பு செய்யப்பட்டு, தொகுதிகளின் இறுதி பட்டியல் தமிழ்நாடு அரசிதழில் வெளியானது. மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி விவாதம் நடத்திய பிறகு அந்த பட்டியல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்கள். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன.

அதன்படி தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சிதம்பரம், நாகபட்டினம், நீலகிரி, தென்காசி ஆகிய 7 தொகுதிகள் தனி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டது. 234 சட்டசபைத் தொகுதிகளில் 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. ஏற்காடு, சேந்தமங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்காக‌ தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டன.

தமிழ்நாடு முன்பு சென்னை மாகாணமாக இருந்த போது 375 சட்டசபை உறுப்பினர்களைக் உள்ளடக்கியிருந்தது. 1953ம் ஆண்டு அக்டோபர் 1 தேதி ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பின் தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை 231 ஆக குறைந்தது. 1956 நவம்பர் 1ம் தேதி மலபார் மாவட்டங்கள் கேரளாவுடன் இணைந்த பிறகு தொகுதிகள் 190 ஆக ஆனது. 1956ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி சீரமைப்பு பணியின் போது சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்த்தப்பட்டது.

1959ம் ஆண்டு ஆந்திராவுடன் மேற்கொண்ட எல்லைச் சீரமைப்பினால் சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்தது. 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’ நீக்கம் சட்டத்தின்படி, 38 இடங்கள் நீக்கப்பட்டன. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையான 206ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

1965ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டது. இதில் 42 இடங்கள் எஸ்.சி. பிரிவினருக்கும், இரண்டு தொகுதிகள் எஸ்.டி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது. 1969ம் ஆண்டு ‘சென்னை மாகாணம்’ என்பது ‘தமிழ்நாடு’ என்று மாற்றம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையில் 234 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரையும் கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழக சட்டமன்றம்.

ஒவ்வொரு தொகுதியிலும் சமமான வாக்காளர்கள் இருக்குமாறு தொகுதிகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரமைக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல் ஆணையர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட தொகுதி சீரமைப்புக் குழு இப்பணியை மேற்கொள்ளும். ஆனால் 1976ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டதிருத்தம் மூலம் இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்டகாலமாக தொகுதிகள் சீரமைக்கப்படாததால் தொகுதிகளின் அமைப்பில் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக டில்லி புறநகர் தொகுதி இருந்தது. வாக்காளர்களின் எண்ணிக்கை 33,68,399. 39 ஆயிரத்து 33 வாக்களர்களை மட்டுமே கொண்டு மிகக் சிறிய தொகுதியாக இலட்சத் தீவு தொகுதி இருந்தது. நீண்ட வருடங்கள் இடைவெளிக்கு பிறகு 2001ம் ஆண்டு மக்கள் தொகைக்கேற்ப தொகுதிகளை சீரமைக்கும் பணி 2003, டிசம்பர் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது.

சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் எல்லைகள், எண்ணிக்கைகள் ஆகியவற்றை வரையறுக்கும் வகையில் 1952ம் ஆண்டு மத்திய அரசு ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம்’ இயற்றியது. தொகுதி மறுசீரமைப்புச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய அரசால் இயற்றப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு, இதுவரை நான்கு முறை தனியே சட்டம் இயற்றியிருக்கிறது. முதல் இரண்டு பொதுத் தேர்தலின் போதும் நடைமுறையில் இருந்த ‘இரட்டை வாக்குரிமை’ முறை நீக்கப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ள தனித் தொகுதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002’ அடிப்படையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்டும், மத்திய தலைமை தேர்தல் ஆணையரையும், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரையும், மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரையும் உறுப்பினர்களாகக் கொண்டு ‘தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’ செயல்பட்டது.

கருத்துகள் இல்லை: