புதன், 25 ஆகஸ்ட், 2010

ச‌ட்ட‌ச‌பைக்கு வ‌ராம‌ல் ஓடி ஒளிந்த‌வ‌ர்தான் க‌ருணாநிதி: ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (ஆக‌ஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கை:

மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்ந்து எடுக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற அளவில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்து இருப்பதை பார்க்கும் போது, ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்’ என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது. உண்மை நிலை என்னவென்றால், புதிய மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவராகிய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று நான் எண்ணியிருந்தேன்.

இந்தச் சூழ்நிலையில், சில சமூக அமைப்புகளும், தகவல் உரிமை ஆர்வலர்களும், மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடு தற்போது மிகவும் மோசமாக இருப்பதாகவும், வழக்குகளை முடிப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும், தலைமை தகவல் ஆணையர் நியமனத்தில் வெளிப்படையான முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, மேற்படி கூட்டத்தில் நான் கலந்து கொள்ள ஏதுவாக, தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களின் விவரங்களை ப‌யோ டேட்டாக‌ளை எனக்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் மூலம் கேட்டிருந்தேன். ஆனால் அதைத் தெரிவிக்காமல், இது குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.8.2010 அன்று 5.00 மணிக்கு குழுக் கூட்டத்தின் முன் வைக்கப்படும் என பதில் அளிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 15(5)-ல் குறிப்பிட்டுள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்று இருக்கிறார்களா, அந்த விவரங்கள் எல்லாம் உண்மைதானா என்பதை உடனடியாக பரிசீலித்து எனது கருத்தை தெரிவிக்க முடியாது என்றும், குழு உறுப்பினர்களான முதலமைச்சருக்கும், முதலமைச்சரால் தெரிவு செய்யப்பட்ட மற்றொரு அமைச்சருக்கும் இது குறித்த விவரங்கள் தெரிந்திருக்கும் சூழ்நிலையில், குழு உறுப்பினராகிய எனக்கு மட்டும் இந்த விவரங்களை தர மறுப்பது பாரபட்சமாகும் என்றும், குழு உறுப்பினரின் உரிமையை பறிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டு, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இந்த முக்கியமான பதவி ஒளிவு மறைவின்றி நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களின் விவரங்களை பயோ டேட்டாகளை எனக்கு அனுப்பி வைக்குமாறு மீண்டும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டேன்.

இவ்வளவு விவரமாக நான் எடுத்துரைத்தும், அதனை ஏற்றுக் கொள்ளாமல், 2005ம் ஆண்டு எனது தலைமையில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் தெரிவு செய்ய கூட்டம் நடந்த போது, “தகுதியானவர்களின் விவரங்கள் குழுக் கூட்டத்தில்தான் வைக்கப்பட்டுள்ளன, முன்னமேயே யாருக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை. அதே முறைதான் தற்பொழுது பின்பற்றப்படுகிறது” என்று பதில் அளிக்கப்பட்டது.

2005ம் ஆண்டு எனது தலைமையில் இது போன்றதொரு கூட்டம் நடைபெற்ற போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை கோரவில்லை என்றும், அவ்வாறு கோரப்பட்டிருந்தால் அந்த விவரங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் என்றும், இப்பொழுது தகவல் உரிமை ஆர்வலர்களால் எழுப்பப்படும் கோரிக்கைகள் எனது ஆட்சிக் காலத்தில் எழுப்பப்படவில்லை என்றும் தெரிவித்து, எனக்கு விவரங்களை அளிக்காமல், என்னை கலந்தாலோசிக்காமல் மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் தெரிவித்து அரசுக்கு மற்றொரு கடிதம் எழுதினேன்.

நான் கோரியிருந்த விவரங்கள் எனக்கு அளிக்கப்பட்டு இருந்தால், நிச்சயமாக கூட்டத்தில் கலந்து கொண்டு எனது கருத்துகளை தெரிவித்து இருப்பேன். எந்தக் கேள்வியையும் கேட்காமல், தான் தயாராக வைத்திருக்கும் கோப்பில் எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்து போட்டுவிட்டு போக வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார்! இதுதான் கருணாநிதி எதிர்பார்க்கின்ற ஒத்துழைப்பு. இத்தகைய ஒத்துழைப்பை என்னால் அளிக்க முடியாது.

மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படக் கூடியவர் அப்பதவிக்கு தகுதி வாய்ந்தவர்தானா? அவருடைய வரலாறு என்ன? அவர் எந்த அளவுக்கு சட்டத்தின் எதிர்பார்ப்புகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் புரிந்து செயல்படக் கூடியவர்? எந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைக்க இயலும் என்பவற்றை எல்லாம் நான் பரிசீலனை செய்யாமல், கருணாநிதி சொல்வதற்கெல்லாம் நான் தலையாட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இது என்னிடம் எடுபடாது.

அடுத்தபடியாக, “கூட்டத்திற்கு ஜெயலலிதா வராததற்கு விளக்கம் அளித்துள்ளாரே?” என்று கேட்கப்பட்டதற்கு, “காவேரி பிரச்சினையாக இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவர் வர மாட்டார். ஒரு வேளை கடிதம் எழுதுவார். அதில் என்னை தரக்குறைவாக தாக்கி எழுதி விட்டு, அவர் வரவில்லை என்பார்” என்று தாறுமாறாக பதில் அளித்து இருக்கிறார் கருணாநிதி. 1991-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, என்னை எதிர்கொள்ள துணிவில்லாமல் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்தவர்; 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, சட்டமன்ற நடவடிக்கைகளில் ஒரு நாள் கூட கலந்து கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்டவர்,என்னைப் பற்றி இது போன்று பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது. காவேரி பிரச்சினை, சென்னை விமான நிலைய விரிவாக்கம், அருந்ததியர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து நடைபெற்ற கூட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். ஆற்று மணல் எடுப்பது குறித்த கூட்டத்தைப் பொறுத்த வரையில், அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டினை நான் தெளிவாக எடுத்துரைத்தேன். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை பொறுத்தவரையில், தமிழர்களை ஏமாற்றும் நாடகம் என்பதால் அ.தி.மு.க. இது குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இல்லை மறைத்துவிட்டு, மனம் போன போக்கில் பதில் அளித்துள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, நியமனக் குழு உறுப்பினராகிய எனக்கு விவரங்களை அளிக்காமல், மாநில தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்யும் அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: