வியாழன், 23 டிசம்பர், 2010

க‌ர்த்த‌ர் அருளால் அ.தி.மு.க‌. ஆட்சி: கிறிஸ்தும‌ஸ் விழாவில் ஜெ பேச்சு

அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா இன்று (டிசம்பர் 23)கலந்து கொண்டார்.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார் ஜெயலலிதா. அங்கு, கேரள மாநில அ.தி.மு.க. சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


திருவனந்தபுரம் விமான நிலைய ஜங்ஷனில் கேரள மாநில அ.தி.மு.க. சார்பில் நிறுவப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் ஜெயலலிதா. பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், அருமனைக்கு வந்து சேர்ந்தார். அவ‌ரை கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்தவ முக்கியஸ்தர்கள் வரவேற்றனர். கேரள சிங்கர் மேளம், மயிலாட்டம், குயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஜெயலலிதா அழைத்து செல்லப்பட்டார்.

அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் தலைவர் தேவராஜ் விழாவிற்கு தலைமை தாங்கினார். கிறிஸ்தவ இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. ஜெஸ்டின் வரவேற்புரை ஆற்றினார்.பேராயர் டாக்டர் கேசரி ஜெபம் செய்த பிறகு, டாக்டர் சுரேஷ் சாமியார் காணி, டேவிட் பெஞ்சமின், வினிஸ் சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிறகு கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டன. அதனை தொடர்ந்து, மரியதாஸ், டாக்டர் ரூபன், சகோதரி அகஸ்டா, ஆர். லீமா ரோஸ் எம்.எல்.ஏ., அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதன்பிறகு ஜெயலலிதா மேடையில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி, ஷெரின்
சல்மா, சகிமா, ஜெனிபர், காண்ஸ்டன் உள்ளிட்ட குழந்தைகளுக்கு வழங்கினார். நலிவுற்ற மூன்று பேருக்கு தையல் மிஷின்களையும், இரண்டு பேருக்கு அரிசி மூட்டைகளையும், மூன்று பேருக்கு திருமண உதவிகளையும் வழங்கினார். தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் காதர் மைதீன் வாழ்த்துரை ஆற்றினார்.

விழாவின் இறுதியில் ஜெய‌ல‌லிதா பேசினார். அப்போது அவ‌ர் கூறிய‌தாவ‌து:

முக்கடலும் சங்கமிக்கும் தென் கோடி திருத்தலமாம் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அன்றைய அரண்மனைதான் காலப் போக்கில் மருவி இன்று அருமனை ஆனதோ என்னும் பெருமைக்குரிய இம்மண்ணைப் பற்றிய அரிய செய்திகளை அறிந்து, மிக்க மகிழ்ச்சியும், ஆச்சரியமும் உற்றேன். ஜாதி, மத பேதமில்லாத சமத்துவத்துக்கு சான்றாக விளங்கும் இத்திருத்தலம், கிராமமும், நகரமும் பின்னிப் பிணைந்திருக்கின்ற ஒரு புதுமை பூமியாய் காட்சி தருகிறது.

உலகத்தைக் காக்கத் தன்னையே தந்த தியாகத்தின் திருவுருவமான இயேசு பெருமானின் இனிய பிறந்த நாளினை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அருமனை வட்டார கிறிஸ்துவ இயக்கம் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அருமையான கிறிஸ்துமஸ் விழாவில் என்னை கலந்து கொள்ளுமாறு அழைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லையில்லா இறை அன்பையும், இணையற்ற இறை கருணையையும், பகிர்ந்து கொள்ள இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! கிறிஸ்தவ நெறி என்பதும், கிறிஸ்தவ வழிபாட்டு முறை என்பதும், கிறிஸ்தவ விழாக்கள் என்பதும், எனக்குப் புதியவை அல்ல.

மனித வாழ்க்கையின் பண்படும் பருவமான மாணவப் பருவம் முழுவதும் நான் கிறிஸ்தவ பள்ளிகளிலேயே பயிலுகின்ற, பயிற்சி பெறுகின்ற, அரிய வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட், பின் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளி பின், மீண்டும் சென்னையில் உள்ள சர்ச் பார்க் கான்வெண்ட் ஆகிய பள்ளிகளில் 11 ஆண்டுகள் தரமான கல்வியைப் பெற்ற மகிழ்ச்சி எனக்கு இன்னமும் ஆனந்தத்தை அளிக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற நேரத்தில், என் நினைவில், என்னுடைய பள்ளிக் கால நினைவுகள் வந்து சென்றன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்குமே கல்விப் பணியையும், மருத்துவப் பணியையும், இறை பணியாக ஏற்று எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் வழங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளையும், அவர்களோடு இணைந்து பணியாற்றிய பெரியவர்களையும் நன்றியோடு நான் நினைத்து வணங்க இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்.

நான் பல முறை கூறி இருக்கிறேன். என்னுடைய பள்ளிப் பருவக் காலத்தில் எனக்கு பெரிய முன் மாதிரியாக இருந்தவர் அருட் சகோதரி செழின் என்ற ஐரிஷ் நாட்டு கன்னிகை.நான் பிஷப் காட்டன் பள்ளியில் படித்த காலத்தில், அந்தப் பள்ளியில் இருக்கும் சேப்பல் என்ற வழிபாட்டுக் கூடத்திற்கு அடிக்கடி செல்வேன். மதிய உணவு வேளையில் உணவு அருந்திய பிறகு மற்ற பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட நான் அந்த சேப்பலுக்குள் சென்று அங்கே இருந்த பைபிள் கதைகள் அடங்கிய புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பேன். பழைய ஏற்பாடு நூல்களில் உள்ள கதைகள்; புதிய ஏற்பாட்டில் ஏசுபிரான் கூறிய உவமை கதைகள் போன்றவற்றை எல்லாம் அந்த சின்னஞ் சிறு வயதிலேயே பல முறை படித்ததால், இன்னமும் கூட அவையெல்லாம் என் நெஞ்சில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளன.

இன்றைய நிகழ்ச்சி போன்ற பல கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும், கேரல் சிங்கிங் என்ற கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிகளிலும், நான் கலந்து கொண்ட இளமைப் பருவ மகிழ்ச்சி இன்னமும் நீங்காது என் நினைவில் நிறைந்துள்ளது. அதே மகிழ்ச்சியோடு, அதே வாஞ்சையோடு, அதே அன்போடு இன்று அருமனையில் உங்களோடு இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிறிஸ்துமஸ் விழாவை உலகின் மிகப் பெரிய அன்பின் கதை என்று சொல்லுவார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கான கிறிஸ்துமஸ் கதைகளை வர்ணிக்கிறார்கள். எனவே, நானும் உங்களுக்கு ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்.

ஆனி என்றொரு சிறிய பெண் இருந்தாள். அவளுக்கு கடவுள் பக்தி அதிகம். நாள்தோறும் பள்ளியில் சேப்பலுக்குச் சென்று இறை வணக்கம் சொல்லுவாள். அவளுடைய பக்தியைக் கண்டு மெச்சிய ஏசுபிரான், அவள் மீது மிகுந்த அன்பு கொண்டார். "உனக்கு எதுவும் வேண்டுமா ஆனி?" என்று அவளைக் கேட்டார். அதற்கு ஆனி "எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது" என்று சொன்னாள். "அதற்கென்ன பார்க்கலாமே! எப்போது பார்க்கலாம்? எங்கே பார்க்கலாம்?" என்று பதில் அளித்தார் ஏசுபிரான். "இன்னும் இரண்டு நாட்களில் கிறிஸ்துமஸ் வரப் போகிறது. எங்கள் வீட்டிற்கு, நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்" என்று தன்னுடைய ஆசையை ஏசுபிரானிடம் சொன்னாள் ஆனி.

கிறிஸ்துமஸ் நாளும் வந்தது. ஆனிக்கு மிகுந்த சந்தோஷம். அவள், "இன்றைக்கு என்னைப் பார்க்க ஏசுபிரான் நம் வீட்டிற்கு வரப் போகிறார்" என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தாள். கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ஆனி வீட்டிற்கு எத்தனையோ பேர் வந்து போனார்கள். சொந்தக்காரர்கள் எல்லாம் வந்தார்கள். நண்பர்கள் எல்லாம் வந்தார்கள். விலை உயர்ந்த பரிசுகளையும், அற்புதமான உணவுப் பண்டங்களையும் அவர்கள் கொண்டு வந்தார்கள். ஆனிக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவளுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் வந்தார்கள். அவளுக்குக் கிடைத்த பரிசுகள், கேக் வகைகள் போன்றவற்றை எல்லாம் தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ஆனி வாஞ்சையோடு வாரிக் கொடுத்தாள். ஆனிக்கு ஒரே ஒரு வருத்தம். ஆனி எதிர்பார்த்தவர் மட்டும் வரவில்லை. ஆனிக்கு அழுகை அழுகையாக வந்தது. தன்னுடைய அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். கிறிஸ்துமஸ் முடியப் போகிறது. இன்னும் ஏசப்பா வரவில்லையே என்று ஏங்கிப் போனாள் ஆனி. அந்த ஏக்கத்திலேயே தூங்கியும் போனாள். திடீரென்று அவளை யாரோ கூப்பிடுவது போல அவளுக்குத் தோன்றியது. அந்தக் குரலை அவள் இதற்கு முன் கேட்டிருந்தாள். பள்ளியில் சேப்பலில் அவளோடு பேசிய அதே குரல்தான்.

"என்ன, எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் போய்விட்டீர்களே?" என்று ஆனி வருத்தத்தோடு கேட்டாள். அப்போது அவர் சொன்னார் "வந்திருந்தேனே ஆனி! நீ கொடுத்த உடை மிகவும் அருமையாக இருந்ததே! நீ கொடுத்த கேக் மிகவும் சுவையாக இருந்ததே! நீ கூட மெர்ரி கிறிஸ்துமஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் என்று என் கையைப் பிடித்துக் கொண்டு அன்போடு குலுக்கினாயே" என்று சொன்னார்.

"எப்போது வந்தீர்கள்? நான் உங்களுக்கு எப்போது டிரஸ்சும், கேக்கும் கொடுத்தேன்?" என்று ஆச்சரியத்தோடு ஆனி கேட்டாள். அதற்கு அவர் சொன்னார்,

"ஆனி, உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் எப்போது வந்தார்?"
"காலையில் வந்தார்."
"யாரோடு வந்தார்?"
"யாரோ ஒரு தாத்தாவோடு வந்தார்."
"நீ அந்த தாத்தாவுக்கு என்ன கொடுத்தாய்?"
"அந்த தாத்தாவுக்கு, குளிராய் இருக்கும் என்று ஒரு போர்வை கொடுத்தேன். எங்க அம்மா எனக்கு சாப்பிடக் கொடுத்த கேக் வகைகளை அவருக்குக் கொடுத்தேன். அவருக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் சொன்னேன். அவ்வளவுதான்" என்று ஆனி பதில் சொன்னாள். அந்தக் குரல் சொன்னது "ஆனி, அந்த முதியவர்தான் நான்." ஆனிக்கு ஒரே ஆச்சரியம். "அப்படியா?" என்று வியந்து போனாள்.

"முன் பின் தெரியாத அந்த முதியவருக்கு நீ செய்ததெல்லாம், எனக்குத் தானே செய்தாய் ஆனி? உன்னுடைய அன்பு தான் ஆனி இந்தக் கிறிஸ்துமஸ். நான் உன்னைப் பார்த்துவிட்டேன். நீ என்னை எப்போது பார்க்க விரும்பினாலும் பார்க்கலாம். உன்னுடைய சக மனிதர்களின் அன்பிலும், மகிழ்ச்சியிலும், என்னை நீ எப்போதுமே பார்க்கலாம்" என்று அந்தக் குரல் சொல்லி மறைந்தது. ஆனி மெய் சிலிர்த்துப் போனாள்.

சின்னஞ் சிறிய சகோதரனுக்கு, சகோதரிக்கு நாம் செய்வதெல்லாம் இறை மகன் ஏசுவுக்கே செய்ததாகும் என்ற உணர்வில் தான் உலகெங்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் இறை அன்பை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, கல்விப் பணி வழியாக, மருத்துவப் பணி வழியாக, இன்னும் பல சமூகப் பணிகள் வழியாகத் தொண்டு ஊழியம் செய்து கொண்டிருக்கின்றனர். யாரோ ஒரு முதியவரில் கடவுளைக் கண்ட ஆனியைப் போல, நாமும் நம்முடைய அயலவர்களின் துன்பங்களைத் துடைத்து, அவர்களின் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம். இதுதான், நான் இன்று உங்களோடும், உலகத்தாரோடும், பகிர்ந்து கொள்ள விரும்புகின்ற கிறிஸ்துமஸ் செய்தி.

இயேசு பெருமான் இந்த மண்ணில் அவதரித்ததன் நோக்கமே அன்பை வெளிப்படுத்தத்தான். “அன்பே பெரிது” என்பதை பைபிள் நமக்கு உணர்த்துகிறது. கிறித்துவ பெருமக்களாகிய நீங்கள், இயேசு பெருமானின் அளவற்ற அன்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், அந்த அன்பை உலகத்தார் ஒவ்வொருவருக்கும் சொல்கின்ற உன்னதப் பணியையும் நீங்கள் செய்து கொண்டு இருக்கின்றீர்கள். கிறிஸ்தவர்களின் விசுவாசம் எப்படிப்பட்டது என்பது எனக்கு நன்கு தெரியும். கர்த்தரை விசுவாசிக்கும் உங்களுக்கும், உங்களின் சுவிசேஷத்திற்கும் நான் எக்காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்” என்று கிறிஸ்து ஏசுவின் பிறப்பு குறித்து ஏசாயா தீர்க்கதரிசி புனித வேதாகமத்தில் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இயேசு பெருமானின் அன்பைப் பெற்றுள்ள நீங்கள், இருளில் மூழ்கியுள்ள தமிழ்நாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,

அன்பு செய்து வாழ்ந்து மகிழ்வோம்!
அயலவரின் மகிழ்ச்சியில் ஆண்டவனைக் காண்போம்!
கிறிஸ்துவின் அன்பு என்பது மன்னிக்கும் அன்பு!
கிறிஸ்துவின் அன்பு என்பது சமத்துவத்தின் அன்பு!
கிறிஸ்துவின் அன்பு என்பது சமாதானத்தின் அன்பு! என்று தெரிவித்து,
அன்புத் தந்தை இயேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆன்ம ஈடேற்றத்தையும், நிறைவையும் தரும் நாள் என்று தெரிவித்து, இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரது உள்ளங்களிலும் பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்த மேடையில் எனக்கு முன்னாள் பேசிய அன்புச் சகோதரர் டாக்டர் சுரேஷ் குமார் உங்கள் அனைவரின் சார்பிலும் மூன்று கோரிக்கைகளை இங்கே வைத்தார். அதாவது, வரப் போகின்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கோட்டையில் முதல்வராக அமர்ந்த பின்பு, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அன்புச் சகோதரர் டாக்டர் சுரேஷ் குமார் இங்கே வைத்தார்கள்.

அதில் ஒரு கோரிக்கை, இஸ்லாமிய மக்களின் புனித யாத்திரை ஹஜ் பயணத்திற்கு எப்படி அரசாங்கம் உதவி செய்கிறதோ, அதைப் போலவே கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைக்கு, இஸ்ரேலுக்குச் செல்லும் புனித யாத்திரைக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். நிச்சயமாக உங்கள் அனைவரின் ஆதரவோடும், அன்போடும் மீண்டும் கழக ஆட்சி அமைந்தால், இந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக, தம்பி சுரேஷ் குமார் வைத்த கோரிக்கை, அவரவர்களுக்கு இருக்கின்ற பட்டா நிலத்தில் தேவாலயம் கட்டிக் கொள்ள தற்போது தடை விதிக்கப்படுகிறது. அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவரவர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் யார் எதை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். இதில் தேவாலயம் கட்டுவதற்கு யார் தடை செல்வது? அவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? ஆகவே, இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கர்த்தரின் அருளால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால், நிச்சயமாக இந்தக் கோரிக்கையும் நிறைவேற்றி வைக்கப்படும்.

அடுத்தபடியாக அவர் வைத்த கோரிக்கை, ஆதிதிராவிடர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சலுகைகள், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டார். இதற்கு ஒரு கமிஷன் உள்ளது. அந்தக் கமிஷனிடம் இந்தக் கோரிக்கை வைக்கப்படும். அந்தக் கமிஷனிடம் முறையிட்டு தேவையான ஆணையைப் பெற்று கர்த்தர் அருளால் அமையப் போகும் கழக அரசு இந்த கோரிக்கையையும் நிறைவேற்றி வைக்கப் பாடுபடும்.

இன்று என்னை இந்த விழாவிற்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பு விருந்தினராக இந்த மேடையில் என்னை அமர வைத்ததோடு மட்டுமல்லாமல், இங்கே நீங்கள் அனைவரும், பேசிய சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என் மீது அன்பை பொழிந்திருக்கிறீர்கள். இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இங்கே கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்றைக்கு கண்ணீரில் மிதக்கிறார்கள். இருளில் மிதக்கிறார்கள். ஆகவே, இன்று உங்கள் அன்பில் திளைத்து, நான் இங்கே கண்டிருக்கின்ற மகிழ்ச்சி இந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதில் நாம் அனைவரும் இங்கே பெறுகின்ற மகிழ்ச்சி, தமிழ் நாட்டில் உள்ள அத்தனை மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இருளில் மூழ்கியுள்ள தமிழகம் வெளிச்சத்திற்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்."

கருத்துகள் இல்லை: