வெள்ளி, 24 டிசம்பர், 2010

தி.மு.க. ஆட்சிக்கு மரண அடி: ஜெயலலிதா பேச்சு

எம்.ஜி.ஆரின் 23-ஆவது ஆண்டு நினைவு நாளில் இன்று (டிசம்பர் 24) எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சமாதியில் மலர் வளையம் வைத்து ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய், தமிழக மக்கள் நினைவில் என்றென்றும் நிறைந்து, நிலைத்து நிற்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நினைவு நாளன்று ஒவ்வொரு ஆண்டும் நாம் இங்கு கூடி வருகிறோம். ஆனால், இந்த முறை விரைவில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் நாம் இங்கே குழுமி இருக்கிறோம். இந்தத் தருணத்தில் அ.தி.மு.க. கடந்து வந்த வெற்றிப் பாதைகளையும், பெருமிதங்களையும், சோதனைகளையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திருக்குவளையில் இருந்து திருட்டு ரயில் ஏறி ஓட்டாண்டியாக சென்னைக்கு வந்து தீய சக்தியாக உருமாறி, தமிழ்நாட்டை கொள்ளையடிக்க வந்த கருணாநிதியை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காக அ.தி.மு.க. வை நிறுவினார் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. உருவான சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், அ.தி.மு.க. தன்னுடைய முதல் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் முதன் முறையாக தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கருநாகக் கூட்டம் சதி செய்து, எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை 1980-ல் கலைக்கச் செய்தது. இருப்பினும், 1980 ஆம் ஆண்டிலேயே சில மாதங்கள் கழித்து நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

கட்சிப் பணி, ஆட்சிப் பணி என இரண்டையும் கவனிக்க முடியாத அந்தச் சூழ்நிலையில், கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை, பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக, 1983 ஆம் ஆண்டு என்னை கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர். இதனைத் தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டு மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்.

எதிர்பாராத விதமாக 1984-ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில், 1984 ஆம் ஆண்டு இறுதியில் வந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தேர்தல் களத்தில் இல்லாத சமயத்தில், அ.தி.மு.க.வின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக சென்று நான் பிரச்சாரம் செய்து வெற்றிக் கனியை அ.தி.மு.க.விற்கு பெற்றுக் கொடுத்தேன். எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், 1987-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைந்ததை அடுத்து துரோகிகளின் துணையோடு அ.தி.மு.க.வை பிளவுபடுத்தினார் கருணாநிதி. கட்சியின் வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னம் முடக்கப்பட்டது. கட்சியில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்திக் கொண்டு 1989-ல் துரதிருஷ்டவசமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி.

இதனையடுத்து, பிளவுபட்ட இயக்கத்தை 1989-ல் ஒன்றிணைத்து, இழந்த “இரட்டை இலை” சின்னத்தை மீட்டு, கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டியதன் விளைவாக அப்போது சில மாதங்களில் மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், திமுக-வினரின் தில்லுமுல்லுகளை தகர்த்தெறிந்து கட்சி அமோக வெற்றி பெற்றது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செயல்பட்டதன் காரணமாக, 1991 ஆம் ஆண்டு ஜனவரியில் கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கட்சி அமோக வெற்றி பெற்று எனது தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்,
69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை கோயம்பேடு அருகே விளையாட்டு நகரம் என பல்வேறு திட்டங்களை தீட்டி சாதனை படைத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கியது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

பின்னர், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.விற்கு எதிராக பொய், புரட்டு, புனை சுருட்டு ஆகியவற்றை கட்டவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் கருணாநிதி. 1996 முதல் 2001 வரை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல் என்னை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு என் மீது பொய் வழக்குகள் புனைவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். எனக்கு எதிராக கருணாநிதியால் போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்தித்தேன். என் மீது புனையப்பட்ட 12 வழக்குகளில், நான் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒரு வழக்கு கருணாநிதியின் மைனாரிட்டி அரசாலேயே வாபஸ் வாங்கப்பட்டது. இதில் இருந்தே என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள் என்பது தெளிவாகிறது.

இதன் பின்னர், அனைத்து தடைக் கற்களையும் மீறி 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றேன். 2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில், திருக்கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் அன்னதானத் திட்டம், அனைத்து மாணவ-மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம் என முத்தான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அமளிக்காடாக இருந்த தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியது.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், நிறைவேற்ற முடியாத பல இலவச திட்டங்களை அறிவித்து மைனாரிட்டி அரசை அமைத்தார் கருணாநிதி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று நான் அறிவித்தேன். ஆனால் கருணாநிதி “எங்கும் ஊழல் எதிலும் ஊழல்” என்று அதை மாற்றி விட்டார். இந்த ஆட்சி ஆறரை கோடி தமிழக மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியா? அல்லது பரந்து விரிந்த கருணாநிதியின் கொள்ளைக் கூட்ட குடும்பத்திற்காக நடத்தப்படுகின்ற ஆட்சியா? என்று மக்கள் கேட்கும் அளவுக்கு ஒரு அலங்கோல ஊழல் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆறரை கோடி மக்களை வேதனையில் தள்ளி, ஒரு குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, நில அபகரிப்பு, திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கொலை, கொள்ளைக்காரர்களுக்குத் துணை போவது என சகல விதமான மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் கடந்த நான்கரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. இன்றைக்கு தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, தி வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற அமெரிக்க நாளிதழ்களும், உலகமே வியக்கும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் ஈடுபாடு குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும், தலைகுனிவை ராசா மூலம் ஏற்படுத்தி உள்ளார் “சர்வதேச ஊழல் மன்னன்” கருணாநிதி.
மொத்தத்தில், ஊழலின் ஊற்றுக்கண்ணாக கருணாநிதியும் விளங்குகிறார். அவரது குடும்பமும் விளங்குகிறது.
அ.தி.மு.க.விற்கு திமுக-விற்கும் நடைபெறுகின்ற யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற யுத்தம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் தீய சக்தியை மூன்று முறை வீழ்த்தி ஆட்சி அமைத்தார். நானும் இரண்டு முறை அதே தீய சக்தியை வீழ்த்தி ஆட்சி அமைத்தேன். இருந்தாலும் தீய சக்தியை நிரந்தரமாக அரசியலில் இருந்து இதுவரை அகற்ற முடியவில்லை. எதிரிகளை தாக்குவதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. லேசாக தாக்கினால் தள்ளாடுவார்கள். சற்று பலமாக தாக்கினால் கீழே விழுந்துவிடுவார்கள். ஆனால் மீண்டும் எழுந்துவிடுவார்கள். அதனால், இந்த முறை நம்முடைய தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும். எதிரி மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நம்முடைய அடி மரண அடியாக இருக்க வேண்டும்.

2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமையப் போவது உறுதி. அந்த அளவிற்கு திமுக-வின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே, துணிவோடு பணியாற்றுங்கள். நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு முன்னால் நான் செல்கிறேன். அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். அந்த வாக்குகளை எல்லாம் சிந்தாமல், சிதறாமல், கட்சிக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பணியைச் செய்ய உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஆயத்தமாக வேண்டும். உங்களிடம் உள்ள வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக் கனியை பறிக்கத் தயாராகுங்கள்! புதிய வரலாறு படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு செயலாற்றுங்கள்! வீறு கொண்டு எழுங்கள்!
அனைத்துத் துறைகளிலும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற தமிழகத்தை முதன்மை மாநிலமாய் மீண்டும் உருவாக்கிடவும், சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டவும், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ்ந்திடவும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கொடுங்கோல் குடும்ப ஆட்சியை அகற்றி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைத்திட சபதம் ஏற்போம்!

1 கருத்து:

eeasy baby சொன்னது…

தி மு க வுக்கு மரண அடி என்ற தலைப்பு -- தமிழிஷ் இல் அ தி மு க வுக்கு மரண அடி என்று வந்து விட்டது , உங்களுடைய விரிவான வேகமான பதிவு ... நன்றி