வியாழன், 30 டிசம்பர், 2010

கூட்டணி முடிவு: ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு அதிகாரம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று மாலை (டிசம்பர் 30) சென்னை வானகரம் ஏரியாவில் நடைபெற்றது. முதலில் செயற்குழு கூட்டம் முடிந்து அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூட்டணி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் முக்கியமான தீர்மானம்.
"வருகின்ற 14வது தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும், அ.தி.மு.க. சார்பில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு செய்வது குறித்தும் முடிவெடுக்க, ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு ஏகமனதாக முழு அதிகாரத்தை வழங்குகிறது" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காத, மீனவர் நலனில் அக்கறை செலுத்தாத தி.மு.க. அரசுக்குக் கண்டனம், மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, ஜவுளித் தொழிலை காக்கும் வகையில் பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தல், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“ஜனநாயகப் படுகொலையாளி”, “ஊழல் மன்னர்”, “சுயநலவாதி” கருணாநிதியின் தலைமையிலான ஈவு இரக்கமற்ற காட்டாட்சிக்கு, கொடுங்கோல் ஆட்சிக்கு, குடும்ப சர்வாதிகார மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு, ஜெயலலிதா தலைமையில் பொற்கால ஆட்சியை மலரச் செய்திட பொதுக்குழு சபதம் ஏற்கிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை: