வெள்ளி, 17 டிசம்பர், 2010

தேர்தலில் அரசியல் வாரிசுகள்!

2006 சட்டசபைத் தேர்தலில் நிறைய அரசியல் வாரிசுகள் களமிறங்கின. அவர்களை பற்றி குறிப்புகள் இங்கே...

* மறைந்த தி.மு.க. அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பெரியசாமி. இவரது சகோதரர் அன்பில் பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு, அன்பில் பெரியசாமி திருச்சி - 1 தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

* மறைந்த தி.மு.க. அமைச்சர் தங்கப்பாண்டியின் மகன் தங்கம் தென்னரசு. அருப்புக்கோட்டையில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ஆனார்.

* எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எம்.பி.யாகவும் முன்னாள் தி.மு.க. அமைச்சராகவும் பணியாற்றியவர் மறைந்த ஆலடி அருணா. இவர் மகள் பூங்கோதை ஆலங்குளத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.

* முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன். வீரபாண்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். வழக்கமான தமது வீரபாண்டி தொகுதியை மகனுக்காக விட்டுக் கொடுத்துவிட்டு சேலம் -2 தொகுதிக்கு மாறினார் வீரபாண்டி ஆறுமுகம்.

* தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் ‘முரட்டு பக்தன்’ என்று கருணாநிதியால் வர்ணிக்கப்படும் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன். இவர் தூத்துக்குடித் தொகுதி போட்டியிட்டு அமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்தார்.

* தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்தின் மகன் எம்.ஏ. ஆண்டி அம்பலம். நத்தம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

* காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வீரணன் அம்பலத்தின் மகன் கே.வி.வி. ரவிச்சந்திரன் காங்கிரஸ் வேட்பாளராக மேலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

* தி.மு.க. அமைச்சராக இருந்த என்.கே.கே. பெரியசாமியின் மகன் என்.கே.கே.பி. ராஜா ஈரோடு தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார். அமைச்சரும் ஆனார். ஆள்கடத்தல் புகார் போன்ற காரணங்களால் அமைச்சர் பதவியை பறிக்கொடுத்தார். கைது நடவடிக்கைகளும் அரங்கேறின. கட்சியை விட்டே கட்டம் கட்டப்பட்டார். பிறகு சமீபத்தில்தான் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

* அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சுதர்சனம். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கொலை செய்யப்பட்டார். சுதர்சனத்தின் மகன் கே.எஸ். விஜயக்குமார் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2006 தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டது. இதிலும் வெற்றி பெற்றார்.

* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர் வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

* குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் பி.ஜே.பி. சார்பில் ராதாபுரம் தொகுதியில் களமிறக்கப்பட்டார். தோல்வியை தழுவினார்.

* தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த எம். கிருஷ்ணசாமியின் மகன் எம்.கே. விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் சார்பில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

* காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இரா. அன்பரசின் மகன் அருள் அன்பரசு காங்கிரஸ் வேட்பாளராக சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கருத்துகள் இல்லை: