திங்கள், 20 டிசம்பர், 2010

ராசா மீது ந‌ட‌வ‌டிக்கையா? க‌ருணாநிதி பேட்டி

முத‌ல்வ‌ர் கருணாநிதி இன்று (டிச‌ம்ப‌ர் 20) சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: சி.பி.ஐ. சார்பில் இரண்டாவது முறையாக தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றுள்ளதே?

பதில்: இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல பதற்றம் காட்டுகிறீர்களே?


கேள்வி: இந்தச் சோதனையை தி.மு.க.விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?

பதில்: அவமரியாதைகளையெல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.

கேள்வி: ராஜாவிற்கு சி.பி.ஐ. சார்பில் இன்றைக்கு “சம்மன்” அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அது அவர்களுடைய வழக்கமான பாணி. இது போன்ற விஷயங்களில் சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில் கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு அவர் பதில் சொல்லுவார்.

கேள்வி: தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் உறவு எப்படி உள்ளது?

பதில்: உங்களால் வெட்ட முடியாது.

கேள்வி: ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என்று முன்பே கூறியிருக்கிறேன்.

கேள்வி: அமைச்சர் பூங்கோதையும் நீரா ராடியாவும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்: இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வட நாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.

கேள்வி: சோனியா காந்தி நேற்று பேசும்போது ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

பதில்: அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

கருத்துகள் இல்லை: