ஞாயிறு, 16 ஜனவரி, 2011

மகளிர் இடஒதுக்கீடு. 2016ல்தான் சாத்தியம்!

நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்னும் எத்தனை காலங்களுக்குதான் பேசிக் கொண்டிருக்க போகிறார்களோ தெரியவில்லை. நீண்ட வருடங்களாக சொல்லி வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010 மார்ச் 9ம் தேதி நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் நிறைவேறியது. இன்னும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.


மகளீர் இடஒதுக்கீடு மசோதா முழுமையாக நிறைவேறினால், மக்களவையில் குறைந்தபட்சமாக 181 பெண் உறுப்பினர்களும் மற்றும் 28 மாநில சட்டமன்றங்களில் மொத்தமுள்ள 4,109 இடங்களில் 1,370 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும். தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வர... இன்னும் பல நடைமுறைகளை தாண்ட வேண்டும். ராஜ்ய சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போதே ‘‘மகளிர் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்’’ என்று சொன்னார் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.

மகளிர் இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிறகும் இன்னும் சில நடைமுறைகள் இருக்கின்றன. எந்தெந்த தொகுதிகளை பெண்கள் போட்டியிடும் தொகுதிகளாக அறிவிப்பது பற்றி தீர்மானிக்க குழு அமைக்கப்படும். மகளிருக்கான தொகுதிகளை எந்த அடிப்படையில் பிரிப்பது என்பது உள்ளிட்ட விஷயங்களை குழு ஆராயும். அதுபற்றி அரசியல் கட்சிகள் உட்பட எல்லா தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்படும். இதன்பிறகே, மகளிர் போட்டியிடும் தொகுதிகள் குறித்து குழு பரிந்துரை செய்யும். இந்த பணிகள் எல்லாம் முடிவதற்குள் 2011 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்துவிடும். அதனால் அடுத்த 2014 நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது 2016 சட்டசபைத் தேர்தலிலோதான் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதுவரை வழக்கம் போலவே அரசியல் கட்சிகள் கத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இந்த தேர்தலிலேயே இதனை கொண்டு வர வாய்ப்பும் இருக்கிறது. சட்டம் வரும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தாங்களாகவே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் கொடுக்க முன்வந்தால் அதை எந்த சட்டத்தால் தடுக்க முடியும். ஆனால் தர மாட்டார்கள். காரணம் அதுதான் அரசியல்.

கருத்துகள் இல்லை: