புதன், 5 ஜனவரி, 2011

கருணாநிதி ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று (ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கை:

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது நிலவும் அலங்கோல நிலையை வைத்தே தமிழ்நாட்டின் அவல நிலையை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையற்ற, ஊழல் மிகுந்த, கொடுங்கோல் குடும்ப ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  தற்போது தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன.


இந்தப் பேருந்துகளுக்கான டீசல் மற்றும் ஆயில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள ‘பங்க்’குகளில் இருந்து நிரப்பப்படுகிறது. இவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விநியோகிக்கிறது.  டீசலுக்கான பணத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கி காசோலை மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு செலுத்தும்.  இது தான் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.
இந்தச் சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு முறையாக பணம் சென்று சேராததன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணம் கொடுத்தால் மட்டுமே டீசல் வழங்கப்படும் என்று தெளிவாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தெரிவித்துவிட்டது.  இதன் காரணமாக, ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், டீசலுக்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன.

இதன் விளைவு தான் தற்போதைய டீசல் தட்டுப்பாடு.  உதாரணமாக, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 23 கோடி ரூபாய் டீசல் பாக்கி கொடுக்க வேண்டும் என்றும், இந்தப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான தஞ்சாவூர் பணிமனை ஒரு தனியார் வங்கியில் 12 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.  இதே நிலைமை தான் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் நிலவுகிறது. லாபத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மாநகர போக்குவரத்துக் கழகமே 18 கோடி ரூபாய் அளவுக்கு டீசல் பாக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.  இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஏழை, எளிய மக்களை இணைக்கும் பாலமாக செயல்படும் போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடவடிக்கை எடுக்காமல், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சிக்கி, மத்திய புலனாய்வுத் துறையின் சோதனைக்கு ஆளாகியுள்ள, தனது மகள் கனிமொழி இயக்குநராக இருக்கின்ற, தமிழ் மையத்தின் சென்னை சங்கமத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக் கொடுக்கிறார் கருணாநிதி. அந்த நிகழ்ச்சியை வருகின்ற 12ம் தேதி அன்று துவக்கி வைக்க உள்ளார்.  ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நெருக்கடி கருணாநிதிக்குத் தெரியவில்லை.  இதிலிருந்து முதலமைச்சர் பணியைத் தவிர மற்ற பணிகளில்தான் கருணாநிதியின் கவனம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.  சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பணம் கொடுப்பதற்கு, ‘ஸ்வான்’, ‘யுனிடெக்’ போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன.  எனவே அதைப் பற்றி கருணாநிதி ஏன் கவலைப்படுகிறார் என்று தெரியவில்லை.

போக்குவரத்துக் கழகங்கள் புனரமைக்கப்படும் என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  கருணாநிதியின் அகராதியில் "புனரமைப்பு" என்றால் "அழிப்பு" என்று அர்த்தம் போலிருக்கிறது.  அதனால் தான் போக்குவரத்துக் கழகங்களை அழித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்க வைத்த கருணாநிதியின் ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

1 கருத்து:

Mahes சொன்னது…

நரிகள் அரங்கேற்றிய ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.