வெள்ளி, 28 ஜனவரி, 2011

ஸ்பெக்ட்ரம் தாவூத் இப்ராஹிம் தொடர்பு: ஜெயலலிதா அறிக்கை

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில மாதங்களாக 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ஊடகங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது.  இருப்பினும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எத்தனை பூஜ்யங்கள் என்ற அளவில்தான் இந்த ஊழல் ஒவ்வொருவரையும் ஈர்த்ததே தவிர, இதில் உள்ள மிக ஆபத்தான பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை. மரங்களை கண்டு வனத்தை கவனிக்காதது போல், அற்பமானவற்றில் அக்கறை செலுத்தி, முக்கியமானவற்றை தவறவிட்டுவிட்டதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் தொடரமைவுகள் திடுக்கிடும் வகையில் அமைந்துள்ளன.  இந்திய தேசத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பதையும் தாண்டி இதன் விளைவுகள் அமைந்துள்ளன. உண்மையில், இந்த ஊழல் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் நேர்மையான சிந்தனையுடைய, நாட்டுப்பற்றுடைய ஒவ்வொரு இந்தியரையும் கவலைப்பட வைக்க வேண்டும். நிதி முறைகேடு என்பதை எல்லாம் தாண்டி, இந்த இமாலய ஊழலை நிகழ்த்தியவர்களும், அதன் பின்னணியில் உள்ளவர்களும் தேசத் துரோகச் செயலுக்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.

அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பெற்ற நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தை கூர்ந்து கவனித்தால், இந்தியக் குடியரசின் நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டு இருப்பது, இந்திய நாட்டின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு எதிரிகளிடம் சரணடைந்து இருக்கிறது, சர்வதேச சதிகாரர்களால் விரிக்கப்பட்ட ஆதாய மாய வலையில் எப்படி விழுந்து இருக்கிறது என்பன போன்ற அச்சுறுத்தக் கூடிய தகவல்கள் வெளி வரும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தெளிவற்ற தன்மையுடைய டைகர் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றால் முதலில் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் நிறுவனம், சி.டி.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். ஆகிய இரு சேவைகளையும் ஒரே நிறுவனம் இயக்க புது தொலைத்தொடர்புக் கொள்கை அனுமதிக்காததால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வசம் இருந்த ஸ்வான் பங்குகள் வேறு சில நிறுவனங்களின் கைகளுக்கு மாறின.

மும்பையைச் சேர்ந்த கட்டுமானத் துறை நிறுவனமான டைனமிக்ஸ் பால்வா இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் மௌரீசியஸ் நாட்டைச் சேர்ந்த நிதி நிறுவனமான டெல்பி இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் உள்ளே நுழைந்தன. இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் சூழ்ச்சியினால், 22 தொலைபேசி வட்டங்களில், 13 தொலைபேசி வட்டங்களுக்கான கைபேசி சேவைகளை இயக்குவதற்கான உரிமங்களை 1,537 கோடி ரூபாய்க்கு ஸ்வான் நிறுவனம் பெற்றது.
ஸ்பெக்ட்ரம் உரிமம் என்ற ஒரு காகிதத்தை பெற்ற ஒருசில மாதங்களில், கைபேசி சேவைகளை இயக்க உறுதியான நடவடிக்கை எதையும் எடுப்பதற்கு முன்பே, யு.ஏ.இ. நாட்டைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு தனது 45.73 விழுக்காடு பங்குகளை 4,500 கோடி ரூபாய்க்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் விற்றுவிட்டது. இதனையடுத்து, இந்த நிறுவனத்தின் பெயர் எடிசலாட் டி.பி (டைனமிக்ஸ் பால்வா) என்று மாற்றப்பட்டது.  16 விழுக்காடு பங்குகள் சீனாவின் தொலைத்தொடர்புத் துறை ஜாம்பவானான ஹூவே டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இது தவிர, 380 கோடி ரூபாய் மதிப்புடைய 5.27 விழுக்காடு பங்குகள், வெறும் ஒரு லட்சம் ரூபாய் மூலதனத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த லெட்டர் பேடு நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டன.

ஒசாமா பின் லேடனுக்கு பின் அனைவராலும் பரவலாக தேடப்படும் தீவிரவாதியும், மும்பை குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர் என அறிவிக்கப்பட்ட குற்றவாளியுமான தாவுத் இப்ராஹிமின் பிரதிநிதி என மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களால் கூறப்படுபவர் எடிசலாட் டி.பி. நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான ஷஹீத் பால்வா!  இந்த சந்தேகத் தொடர்பை வைத்துத் தான், இந்தியாவில் உள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் பெறக்கூடாது என்று மத்திய உள் துறை அமைச்சகம் வழக்கத்திற்கு மாறாக கூறியது. டைனமிக்ஸ் பால்வா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவர் தாவூத் இப்ராஹிம் நிறுவனத்திலும் இயக்குநராக இருக்கிறார் என்று உள் துறை அமைச்சகம் சந்தேகப்பட்டதாக உள் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உறவினர்களுக்காக பல வழக்குகளில் வழக்கறிஞராக தற்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆஜராகி இருக்கிறார் என்பது தான். கபில் சிபல் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவி வகிப்பது என்பது முரண்பாடுகள் நிறைந்ததாக விளங்குகிறது.
 
பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் எடிசலாட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் அதிகாரம் செலுத்தும் வகையில் எடிசலாட் குழுமத்திற்கு பங்குகள் இருக்கின்றன. எடிசலாட் யு.ஏ.இ. மற்றும் பி.டி.சி.எல் ஆகிய இரு நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த எடிசலாட் டி.பி. நிறுவனத்திலும் போர்டு உறுப்பினர்களாக உள்ளனர். எடிசலாட் நிறுவனத்தின் கையில் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது? விடுதலை அடைந்ததிலிருந்து இரண்டு முறை இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்று இருக்கிறது. இன்றுவரை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து, இந்தியாவிற்கு எதிராக மறைமுக போரை பாகிஸ்தான் நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்தியா மீது பாகிஸ்தானுக்குள்ள பகைமை உலகமே அறிந்த விஷயம்.  இப்படிப்பட்ட பாகிஸ்தான், எடிசலாட் நிறுவனத்தை தவறுதலாக பயன்படுத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக போரிட்டு, இன்றளவும் இந்திய எல்லையில் ஊடுருவல்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்ற சீன மக்கள் விடுதலை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரென் செங்பி என்பவரால் நிறுவப்பட்ட ஹுவே டெக்னாலஜீஸ் என்கிற சீன தொலைத்தொடர்பு நிறுவனம் முந்தைய ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 16 விழுக்காடு பங்குகளை தற்போது வாங்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு, யு.ஏ.இ. நாட்டின் பிளாக்பெரி சேவைகளில் கண்காணிப்பு வழிமுறைச் செயல்களை தங்கள் நிறுவனம் வைத்திருக்கிறதா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தங்கள் நிறுவனம் இயங்குகிறதா, டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான ஹுவே நிறுவனத்துடன் தொழில்நுட்ப உறவு தங்கள் நிறுவனத்திற்கு இருக்கிறதா என பல்வேறு பாதுகாப்புத் தொடர்பான கூடுதல் தகவல்களை எடிசலாட் நிறுவனத்திடம் இந்திய உள் துறை அமைச்சகம் கேட்டுள்ளது.  தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட உபகரணங்களை தொலைவில் இருந்து கையாளும் திறமை ஹுவே நிறுவனத்திற்கு இருக்கிறது என்ற கவலையையும் உள் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

1970 முதல் கருணாநிதி குடும்பத்திற்கு மிக நெருக்கமான இ.டி.ஏ. குழுமத்தைச் சேர்ந்த ஜெனிக்ஸ் எக்சிம் என்ற நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் மூலதனத்தில்  ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் துவங்கிய மூன்றே மாதங்களில் 380 கோடி ரூபாய் மதிப்புடைய ஸ்வான் பங்குகளை பெற்றது. கருணாநிதி குடும்பத்தினரின் கள்ளத்தனமான பணம் முழுவதும் இந்த இ.டி.ஏ. குழுமம் மூலமாக வெளிநாடுகளில் உள்ள வரி ஏய்ப்பு புகலிடங்களுக்கு செல்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளி வந்தவுடன், பதற்றம் அடைந்த ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனம் தன் வசம் இருந்த 5.37 விழுக்காடு எடிசலாட் பங்குகளை வாங்கிய விலைக்கே (380 கோடி ரூபாய்) திருப்பிக் கொடுத்துவிட்டது! இதன் மூலம் இந்த நிறுவனம் ஏன் தொலைத்தொடர்பு பங்குகளை முதலில் வாங்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது? இவ்வாறு வாங்கிய பிறகு, பணிகள் துவக்கப்படுவதற்கு முன்பே, லாபமே பார்க்காமல் ஏன் அந்தப் பங்குகளை அதே விலைக்கு விற்றது?

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய நாட்டின் இழப்பில் ஆண்டிமுத்து ராசாவால் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பாகிஸ்தான், சீனா மற்றும் மாஃபியா தலைவன் தாவூத் இப்ராஹிம் ஆகியோரிடமிருந்து இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு பல் முனைகளில் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி தந்துள்ளது! இவை அனைத்தும் கருணாநிதி குடும்பத்தினரின் பணத்தாசையை, பேராசையை திருப்திபடுத்துவதற்காகத்தான். இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பது மட்டும் தற்போது கேள்வி அல்ல.

இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை தான் தற்போதைய முக்கியமான கேள்வி.  இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அனைத்தும் தெரிந்திருந்தும், இது குறித்து பல்வேறு காலகட்டங்களில் பல எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தும், ராசாவின் கீழ் இருந்த தொலைத்தொடர்புத் துறை அனைத்திற்கும் ஒப்புதல் அளித்துவிட்டதுதான்!

இதற்குப் பிறகு மத்திய உள் துறை அமைச்சகம் தீவிர மவுனத்தைத்தான் கடைபிடித்து வருகிறது.  ஏன்? யாருடைய உத்தரவின் பேரில்? வஞ்சகமான வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், தவறான கொள்கை மூலம், முறைகேடாக வழங்கப்பட்ட 2ஜி உரிமங்களை உடனடியாக கபில் சிபல் ரத்து செய்ய வேண்டும். தொலைத் தொடர்பு அலைவரிசை என்பது மதிப்புமிக்க அரிதான நாட்டின் வளம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், பகைமை நாடுகளின் கைகளில் இந்த வளம் சென்றடையக் கூடாது.  இந்தப் பிரச்சினைகளில் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்,  எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் சாதிப்பது இந்திய நாட்டின் சில தேசிய தலைவர்களின் தேசப்பற்று குறித்த முக்கியமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது.

கருத்துகள் இல்லை: