ஞாயிறு, 9 ஜனவரி, 2011

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல்: ஜெயலலிதா பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், சுவாமித் தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் சுவாமி தலைமை பதியில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியில் ஜெயலலிதா இன்று (ஜனவரி 9) கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் போனார் ஜெயலலிதா. அய்யா வைகுண்டர் சுவாமி தலைமை பதியில் வழிபாடு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஆற்றிய உரை:


ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளை இழந்த மக்கள், அன்றாடம் காய்ச்சிகளாய் அல்லல்பட்ட மக்கள், ஆண்டவனின் பெயராலும், ஆட்சி செய்பவரின் கொடுங்கோல் சட்டங்களாலும் துன்புறுத்தப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டி தன்னையே அர்ப்பணித்த அய்யா வைகுண்டசுவாமி பதியில் உங்களோடு சேர்ந்து வழிபடுவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.

தம்மை நாடி வந்த அன்பர்களுக்கு ஆன்மீக ஞானத்தைப் புகட்டி, இறை வழிபாட்டில் புதியதோர் மார்கத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர்.  அய்யா வைகுண்டருடைய போதனைகள் மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தின.  அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைக் கேட்ட மக்கள் மூட நம்பிக்கையை முற்றிலும் வெறுத்தனர்.  தீண்டாமை என்னும் தீய பழக்கத்தினை வேரோடு ஒழிக்க முற்பட்டனர்.   ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, என்ற உண்மையை உணர்ந்தனர்.
 
தீண்டாமையை ஒழிக்கும் வகையில் அந்த காலத்திலேயே சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்தவர் அய்யா வைகுண்டர்.  சுயமரியாதைக்கு வித்திட்டவர்.  சமூக நீதியை நிலைநாட்டப் பாடுபட்டவர்.  சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர். கல்விக்கும், சிறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்தவர். சாதியற்ற சமுதாயம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அய்யா வைகுண்டரின் நோக்கமாக இருந்தது. லட்சோப லட்சம் மக்களின் கண்ணீரைத் துடைத்த அய்யா வைகுண்டர், தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பல ஒடுக்கப்பட்ட இன மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் நாம் எண்ணி, எண்ணி மகிழத்தக்கவை.

சமய சீர்திருத்தவாதியாக, சமூக நெறியாளராக, பொருளாதார மேன்மைக்கு வழி சொல்லும் வித்தகராக, மக்களிடையே சமத்துவம் காணத் துடித்த மனிதாபிமானியாக, அய்யா வைகுண்டர் ஆற்றிய பணிகளை, தமிழ்ச் சமூகம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அய்யா வழிபாட்டில் உருவம் கிடையாது.  அய்யா வழிபாட்டு ஆலயங்களின் கருவறைகளில் கண்ணாடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. காரணம், கண்ணாடியில் அழுக்குப் படிந்தால் நம்முடைய பிம்பத்தை அந்த அழுக்கு மறைத்துவிடும்.
  
அது போல், மனித மனத்தில் அழுக்கு படிந்தால் அங்கே சத்தியம் மறைந்து போகும்.  சத்தியம் மறைந்தால் கலியாகிய மாயை பற்றிக் கொள்ளும்.  மனம் ஒரு மெருகு ஏற்றப்பட்ட நிலைக் கண்ணாடி.  அதுவே உலகில் வசிக்கும் பிறரிடம் நாம் எப்படி நடந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நமக்குள் பிரதிபலிக்கிறது.  அதன் மீது தூசு படியாமல், தூய்மையாக வைத்துக் கொள்வது நமது பணியாகும். ஆகவே, கண்ணாடியைப் போல் மனத்தையும் சுத்தமாக வைத்துக்கொள் என்பதை அறிவிக்கும் செயலே அதுவாகும்.
 
அய்யா வழி வந்த பால பிரஜாபதி அடிகளார், அய்யா வைகுண்டரின் அறிவுரைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார். சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டு, மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக பால பிரஜாபதி அடிகளார் அவர்கள் விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.  அடிகளாரின் பணிகளை பாராட்டும் விதமாக, எனது ஆட்சிக் காலத்தில் “கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது” என்னால் அவருக்கு வழங்கப்பட்டதை இந்த இனிமையான நேரத்தில் நினைவு கூர விரும்புகின்றேன்.

உலகில் நிகழ்ந்த ஒவ்வொரு யுகத்திலும் தர்மம் குன்றி அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் ஓர் அவதாரப் புருஷனாக இறைவன் அவதரித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டியுள்ளார். அது போல், இந்த கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள். தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது; சரியான பாதையில் நடப்பதாகும்.  தர்மம் என்றால் அறம் என்று பொருள். இந்தத் தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சிறிய கதையை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது.  அரசனுக்கு கடும் கோபம். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.  ஒரு மாதத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் ‘மரண தண்டனை’ என்றும் அறிவித்தார். அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு கிடைத்தது. அந்த சிலம்பு குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்டறிந்தார் துறவி. மக்கள் அரசனின் உத்தரவை அவரிடம் தெரிவித்தனர். அரசனின் உத்தரவை அறிந்த துறவி ஒரு மாதம் கழித்து அந்தச் சிலம்பை அரசனிடம் கொடுத்தார்.  உடனே அரசன் அந்தத் துறவியைப் பார்த்து “உனக்கு இப்போது மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார்.  அதற்கு அந்தத் துறவி,

* சிலம்பு கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசைப்பட்டதாக ஆகிவிடும்.
* மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி சிலம்பை கொடுக்காமலேயே இருந்தால் மரண தண்டனைக்கு அஞ்சியவன் ஆகி விடுவேன்.
* சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் ஆகி விடுவேன் என்று தெரிவித்து, அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
 
இதைக் கேட்ட அரசர், தலைவணங்கி துறவியை அனுப்பி வைத்தார். எப்படிப்பட்ட தர்மத்தை அந்தக் காலத்தில் கையாண்டார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.  இப்படிப்பட்ட தர்மத்தை கடைபிடித்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.  வாழும் போதே பிறருக்கு உதவுகின்ற மனிதப் பண்பை மக்கள் மனதில் பதித்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள். நாட்டு மக்களை சுரண்டி சேர்த்த சொத்தில் ஒரு விழுக்காட்டைக் கூட வாழும் போது கொடுக்க மனமில்லாத, எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு... என்று சொல்பவர்களும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 ஒரு பன்றி “என்னைக் கொன்று, சுவைத்து உண்கிறார்கள்.  அப்படி இருந்தும் என்னைக் காணும் போது திட்டுகிறார்கள்.  ஆனால் பசுவை மக்கள் போற்றுகிறார்கள். ஏன் மக்கள் பாகுபாடுடன் நடந்து கொள்கிறார்கள்?” என்று அந்தப் பன்றி நியாயம் கேட்டது. இதற்குப் பசு, பன்றியை பார்த்து, “எனக்கும், உனக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.  நான் உயிருடன் இருக்கும் போதே பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தருகிறேன்.  பன்றியாகிய நீயோ செத்த பிறகுதான் மக்களுக்கு இறைச்சியைத் தருகிறாய். அதனால்தான் மக்கள் என்னைப் போற்றுகிறார்கள்” என்று கூறியது.  எனவே, செய்கின்ற தர்மத்தை உயிருடன் இருக்கும் போதே செய்திடல் வேண்டும். உங்களிடம் சிறந்ததை நாட்டிற்குக் கொடுங்கள்.   நாடு சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்.

கொலை, கொள்ளை, சுரண்டல், வஞ்சகம், சூழ்ச்சி, கற்பழிப்பு ஆகிய அதர்மங்கள் அதிகரித்து பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகி இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், அய்யா வழி வந்த நீங்கள் எல்லோரும் தர்மத்தை நிலைநாட்ட எனக்குத் துணையாக நிற்க வேண்டும். எனக்கு முன்னால் பேசிய மரியாதைக்குரிய அய்யா வழி வந்த பால. பிரஜாபதி அடிகளார் வாய் நிறைய வாழ்த்தினார்.  மீண்டும் கழக ஆட்சி அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.  இங்கு இந்த மக்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறினார்.  இந்த பதிக்கு வெளியே ஒரு வேலி போட்டிருப்பதாக தெரிவித்தார்.  நீங்கள் துணை நில்லுங்கள்.  இந்தத் தேர்தலுக்குப் பிறகு நம்முடைய ஆட்சி அமையட்டும்.  அதன் பின், அய்யா வைகுண்டர் அருளால் எல்லா வேலிகளும் தகர்த்தெறியப்படும்.

மக்களுக்கு இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பால. பிரஜாபதி அடிகளார் தன் மனதில் என்னென்ன கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்று எண்ணி, எந்தெந்த கோரிக்கைகளை இங்கே வைக்காமல் விட்டுவிட்டாரோ, அத்தனை கோரிக்கைகளையும் அய்யா வைகுண்டர் அருளால் நிறைவேற்றித் தரப்படும்.

நடைபெறப் போகின்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற ஒரு தேர்தல் ஆகும்.  இது அ.தி.மு.க-விற்கும், திமுக-விற்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல் அல்ல.  நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடைபெறுகின்ற யுத்தம்.  தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற யுத்தம்.  நல்லாட்சிக்கும், தீய ஆட்சிக்கும் இடையே நடைபெறப் போகின்ற யுத்தம். ஆகவே, அய்யா வைகுண்டர் அருளாலும், நல்ல ஆட்சி அமைந்தால், கழக ஆட்சி அமைந்தால், மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

கருத்துகள் இல்லை: