வியாழன், 17 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி!


இப்போது உளவுத்துறையில் இருக்கும் ஜாபர் சேட் மீது விமர்சனங்கள் எழுந்திருப்பது போல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி மீது ஏகப்பட்ட புகார்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு கட்சிகளை இழுத்து வர ரொம்பவே உழைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ஜெயலலிதா பிரச்சாரம் போன இடங்களில் எல்லாம் சிவனாண்டியும் தவறாமல் ஆஜர் ஆனார்.


சசிகலாவின் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்போது சிவனாண்டிக்கு ஏக மரியாதை, போலீஸ் துறையில் அதிக அதிகாரம் என்று வலம் வந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு வருவதாகக் சொல்லிக் கொண்டே ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை வழி வகுத்தார். பிரச்சாரத்திலேயே மக்கள் மனநிலை என்ன? 'யாருக்கு ஓட்டு போடுவீங்க..' என்றெல்லாம் சிவனாண்டி கேட்டது அப்போது சலசலப்பை உண்டாக்கியது. கிட்டத்தட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவே மாறிப் போயிருந்தார் சிவனாண்டி.

ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கு கூட்டம் வரவில்லை என்றால் அதை எப்படி கொண்டு வருவது என்று நிறைய வேலைகளை பார்த்தார். தனது வீட்டையே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எதிரில் மாற்றினார். இதெல்லாம் பார்த்து தி.மு.க. ஏகத்துக்கும் கொதித்தது. தொடர்ந்து தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. புகார்களை தட்டவே.. வேறு வழியில்லாமல் அந்த பதவியில் இருந்து சிவனாண்டியை தூக்கியது தேர்தல் கமிஷன்.

இதேல்லாம் போன தேர்தலில் அரங்கேறிய விஷயம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே நிலைமை தலை கீழாக மாறியது. கொஞ்ச நாட்களுக்கு சிவனாண்டியை ஒதுக்கி வைத்த தி.மு.க., அதன்பிறகு அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. எந்த சிவனாண்டிக்காக வானத்திற்கும் பூமிக்கு குதித்ததோ, இன்று சிவனாண்டியை நல்ல இடத்தில் உட்கார வைத்து தி.மு.க. அழகு பார்க்கும் கொடுமையை எங்கே போய் சொல்ல.

கேடு கெட்ட அரசியல் இது.