வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 17) வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதியின் மகள் கனிமொழி 16.2.2011 அன்று காலையில் “கைது” செய்யப்பட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பதுக்கப்பட்டதில் கனிமொழிக்கு பங்கு உள்ளதாக கூறப்படுவது குறித்து மத்திய புலனாய்வுத் துறையால் கனிமொழி கைது செய்யப்படவில்லை. தனது தந்தையான கருணாநிதியின் காவல் படையால் கைது செய்யப்பட்டார் கனிமொழி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிலையை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு “மறியல்” செய்த காரணத்திற்காக கனிமொழி கைது செய்யப்பட்டார்.

இலங்கைக் கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடுக்கடலில் தாக்கப்பட்டதன் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 540 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழக மீனவர்களுக்காக ஒரு முறை கூட கனிமொழி தனது சுண்டு விரலை அசைக்கவில்லை. ஓராண்டிற்கு முன்பு இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேவை சந்தித்து, அவரிடமிருந்து பரிசுப் பொருட்களை பெற்ற போது கூட, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் வசைபாடப்படுவது, துன்புறுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது குறித்த பிரச்சினைகளை கனிமொழி எழுப்பவில்லை.

இது கைது...இது ராஜபக்ஷேவிடம் அன்பளிப்பு..

15 நாட்களுக்கு முன்பு, மேலும் ஒரு விலையுயர்ந்த மீனவரின் உயிரை இலங்கைக் கடற்படை பலி வாங்கியது. அப்பொழுதும் கனிமொழி வாய்மூடி மவுனியாகத்தான் இருந்தார். மீனவர் பிரச்சினையில் கனிமொழியின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கையில், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு, மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசை குற்றம் சாட்டி, இலங்கைத் தூதரகம் முன்பு “மறியல்” செய்யும் முடிவை ஏன் எடுத்தார்? உண்மையிலேயே கனிமொழிக்கு மீனவர்களின் மீது அக்கறை இருக்கிறதா? அல்லது, ஏதோ கபட நாடகம் நடத்த வேண்டுமென்ற நோக்கத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உச்சகட்டத்தில் இருக்கும் போது, போரை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக “மூன்று மணி நேர உண்ணாவிரதம்” நடத்திய பிரசித்தி பெற்ற தனது தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரா?

இதற்கான விடை கிடைக்க பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பாக கனிமொழி மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்படுவார் என்று தொடர்ந்து குழப்பமான செய்திகள் யூகத்தின் அடிப்படையில் வந்து கொண்டிருப்பதையடுத்து ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார் கனிமொழியின் “பகுத்தறிவு” தந்தை கருணாநிதி. எனவே, இது குறித்து தனது குடும்ப ஜோதிடரின் ஆலோசனையை கேட்டுப் பெற்று இருக்கிறார். அதன்படி, கனிமொழியின் ஜாதகத்தில், கிரகங்களினால் வகுக்கப்பட்டுள்ள தலையெழுத்தை மாற்றி அமைப்பதற்காக, தனக்கே உரிய பாணியில் ஒரு சதித் திட்டத்தை தீட்டினார் கருணாநிதி. பொதுப் பிரச்சினைக்காக “ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கி” அதற்காக “கைது” ஆவதன் மூலம், தனது கைது குறித்து தன்னுடைய ஜாதகத்தில் முன்கூட்டியே கூறியிருப்பதை கனிமொழி பூர்த்தி செய்துவிடுவார். இதன் மூலம் கிரிமினல் குற்றத்திற்காக மத்திய புலனாய்வுத் துறையால் கனிமொழி கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த முடியும் என்பது கருணாநிதியின் யுக்தி!

இரவோடு இரவாக, மீனவர் பிரச்சினைக்கான போராட்டம் நடத்துவது குறித்து திட்டம் தீட்டப்பட்டது. போராட்டம் துவங்க இருந்த இடத்திலிருந்து  போராட்டக்காரர்கள் புறப்படுவதற்கு முன்பே போராட்டக்காரர்களும், போராட்டத்தின் “தலைவர்” கனிமொழியும், கனிமொழியின் தந்தை கருணாநிதி அனுப்பிய காவல் படையினரால் சம்பிரதாயத்திற்காக கைது செய்யப்பட்டனர். “ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தது போல”, கனிமொழியின் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதியை பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், கனிமொழிக்கும், தி.மு.க.விற்கும் தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளது என்பதை மீனவர்களுக்கு உணர்த்தும் வகையில் இரண்டு நோக்கங்கள் கருணாநிதியின் நாடகத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன! என்ன நயவஞ்சகமானத் திட்டம்!

ஆனால், இது போன்ற கபட நாடகங்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள  ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை கனிமொழியும் அவரது தந்தை கருணாநிதியும் உணர வேண்டும். போலியான கைது உண்மையான கைதுக்கு ஈடாகாது.  சட்டத்தின் நீளமான கைகள் நிச்சயமாக வீடு தேடி வரும். அப்பொழுது பெருமளவுக்கு சுருட்டப்பட்ட ஸ்பெக்ட்ரம் பணம் தாங்க முடியாத பாரமாக அமையும்.

கருணாநிதி குடும்பத்தினரின் இது போன்ற கபட நாடகங்களால் அன்றாடம் மீனவர்கள் சந்தித்து வரும் முக்கியத்துவமான பிரச்சினை கொச்சைப்படுத்தப்படுகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து “கடுமையான எதிர்ப்புகள்” வெளியுறவுத் துறைச் செயலாளர் நிரூபமா ராவ் மூலம் ராஜபக்ஷே அரசுக்கு இந்திய அரசு தெரிவித்து ஒரு வாரம் கூட முடிவடையாத சூழ்நிலையில், இலங்கை கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்ததாக ஒரு குற்றச்சாட்டினை சுமத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து கைது செய்துள்ளனர். 16.2.2011 அன்று மீண்டும் இந்திய மீன்பிடி படகுகளை தாக்கி, அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி 24 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது. வெறும் கடிதங்களை சென்னையிலிருந்து டெல்லிக்கு அனுப்புவதன் மூலமோ, அல்லது டெல்லியிலிருந்து கொலும்புவிற்கு தூதுவர்களை அனுப்புவதன் மூலமோ எந்தப் பயனும் ஏற்படாது.  கருணாநிதியால் அனுப்பப்படும் கடிதங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டு கொள்வதில்லை என்பது வரிசையாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது. இதே போன்று, இந்தியாவின் எச்சரிக்கையையும் இலங்கை அரசு அலட்சியம் செய்து வருகிறது.

கடுமையான நடவடிக்கைகள் தேவை.  முதல் நடவடிக்கையாக, இலங்கை விமானப் படையின் பதினாறாவது ஆண்டு விழாவிற்கு இந்திய விமானப் படையின் சுகோய் விமானம் அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.  இந்தியாவின் கடல் எல்லையை தனது முந்தைய நிலைக்கு எடுத்துவரும் வகையில், இந்திய வரைபடத்தில் கச்சத்தீவினை மீண்டும் சேர்க்க, இலங்கை அரசுடனான கச்சத்தீவு உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இந்தியாவின் கடற்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்களுக்கு எதிரான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால், கடுமையான விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் மஹிந்தா ராஜபக்ஷேவிடம் தெரிவிக்க வேண்டும்.

1 கருத்து:

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

அடா அடா என்ன பகுத்தறிவு பகலவனின் யுக்தி இந்த கைது நாடகமும் கருனாநிதியின் உண்ணாவிரத நாடகம் போல்தான்