செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தமிழகத்தின் பெரிய தொகுதிகள்!

2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகுதியாக இருந்தது வில்லிவாக்கம் தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. தொகுதி சீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிகப் பெரிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது வில்லிவாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன‌. அதன்படி தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர்தான்.

சோழிங்கநல்லூர் தொகுதியில், ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 834 ஆண்கள், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 781 பெண்கள் என மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 615 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக அதிக வாக்காளர்கள் கொண்ட இரண்டாவது தொகுதி கவுண்டம்பாளையம். இது கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. 1 லட்சத்து 47 ஆயிரத்து 113 ஆண்களும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 799 பெண்களும் என்று மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 912 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டியிருக்கும் ஆவடிதான் அதிக வாக்காளர்கள் கொண்ட மூன்றாவது தொகுதி ஆகும். இங்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 661 ஆண்களும் 1 லட்சத்து 30 ஆயிரத்து 228 பெண்களும் 25 திருநங்கைகள் என, 2 லட்சத்து 65 ஆயிரத்து 914 வாக்காளர்கள் இந்த தொகுதியில் இருக்கிறார்கள்.