வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் ச‌ற்றும் எதிர்பார்க்கவில்லை.

இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொது மக்கள் நேரிலேயே பார்த்து வருகின்றனர்.நான் குடித்து விட்டு குளு குளு அறையில் கிடப்பவன் அல்ல. ஊழலை ஒழிப்பதும், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருள் வழங்குவதும் ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் குடிகாரன் பேச்சாகத் தெரியலாம். வீடு தோறும் அரசின் வசதிகளை கொண்டு செல்வது அரசுகளின் கடமை என்பது இந்த நவீன அரசியல் யுகத்தில் கடைப்பிடிக்கப்படுவதுதான். வீடு தோறும் ரேஷன் பொருட்களை வழங்குவது என்பது மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பவருக்கு தெளிவாகும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னைக் கருப்பு எம்.ஜி.ஆர். என்று நான் ஒரு போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஜெயலலிதாவைப் போல மேரி மாதா, அன்னை தெரசா என்ற அந்தஸ்துக்கும் என்னை உயர்த்திக் கொண்டதும் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை. எம்.ஜி.ஆர். இல்லையே என்ற ஏக்கத்தில் நாட்டு மக்கள்தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று அழைக்கிறார்களே தவிர வேறல்ல. அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பையும், மரியாதையையும், பாசத்தையும் வைத்திருப்பவன் நான். அவர் வாழ்வில் இரண்டற கலந்து வாழ்ந்த ஜானகி ராமச்சந்திரன் இதை நன்கு அறிந்து, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிரசார வண்டியை எனக்குப் பரிசாக அளித்துள்ளார். அவர் வாழ்ந்து காட்டிய நெறியில், நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆண்டு தோறும் என் பிறந்த நாளில் 25 லட்சம் ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறேன்.
1992ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆண்டு தோறும் வழங்கி வருகிறேன். இன்றளவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆசி எனக்கு என்றும் உண்டு. இன்றும் என்றும் அவரையே எனது அரசியல் ஆசானாக கொண்டுள்ளேன்.

ஆளுநர் சென்னா ரெட்டியையே கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதில் எந்த வியப்பும் இல்லை. யார் என் மீது சேற்றை வாரி வீசினாலும், அவற்றை சந்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நான் பெற்றிருக்கிறேன். இதுபோன்ற விமர்சனத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான மக்கள் மதிக்கத்தக்க அரசியல் ரீதியான விமர்சனங்களையும், அறிக்கைகளையும் என்றைக்குமே நான் வரவேற்பேன்.

எம்.ஜி.ஆர். கனவு பற்றிப் பேசும் ஜெயலலிதா அவரது கனவுகளை இரண்டு முறை முதல்வராக இருந்த போது நிறைவேற்றாதது ஏன்? எம்.ஜி.ஆர். இதய தெய்வம் என்றும், நிறுவனத் தலைவர் என்றும், பாரத ரத்னா என்றும் தங்கள் வாயால் புகழ வைத்ததையே எனக்குக் கிடைத்த பெரும் பேறாக கருதுகிறேன். என்னால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை இத்தனை தடவை உச்சரித்தீர்களே, அதற்காக எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே குறிக்கோள். ஜெயலலிதா போன்றோர் நம் மீது பாய்வது திசை திருப்பும் முயற்சி. இந்த சதி வலையில், சிக்காமல், முயல் வேட்டையை விட வேல் ஏந்திச் செல்லும் யானை வேட்டையே மேல் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தை காப்பாற்ற கழகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.'' -
ஜெயலலிதாவின் குடிகாரன் அறிகைக்கு விஜயகாந்த் கொடுத்த பதிலடி அறிக்கை (2006 அக்டோபர் 24)

''ஜெயலலிதா எல்லாம் தெரிந்த மாதிரி பேசுகிறாரே அவர் ப‌க்க‌த்தில் இருந்து ஊற்றிக் கொடுத்தாரா?'' என்றெல்லாம் பிற‌கு காட்ட‌மாக‌ கேட்டார் விஜ‌ய‌காந்த். அந்த காட்டம் இப்போதும் இருக்கிறதா? தே.மு.தி.க‌. கப்ப‌ல் போய‌ஸ் கார்ட‌னில் க‌ரை ஒதுங்கியிருக்கிற‌து. சிரஞ்சீவிக்கு வந்த நிலை கேப்டனுக்கும் வந்துவிட்டதோ.

2 கருத்துகள்:

ISAKKIMUTHU சொன்னது…

Yavaram Nalla Pogutham

nerkuppai thumbi சொன்னது…

இது போல் மருத்துவர் ஐயா கலைஞரைப் பற்றி சென்ற தேர்தலின் போது பேசியதும், காங்கிரசு பற்றி கலைஞர் பல தேர்தலில் பேசியதும், எடுத்து எழுதிக் கொண்டிருந்தால் ஆயிரம் பதிவுகள் போதுமானதல்ல.