செவ்வாய், 1 மார்ச், 2011

10 தொகுதிகளை பெற்றது ஏன்?: திருமாவளவன் விளக்கம்

தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களை பெற்றது ஏன் என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென 28.02.2011 அன்று கூட்டணியின் தலைவர் முதல்வர் கலைஞருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத்தக்க அளவிலான தொகுதிகளைப் பெற்று போட்டியிட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

குறைந்தது பதினைந்து தொகுதிகளிலாவது போட்டியிட்டால்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுமளவிலான இடங்களில் வெற்றி பெற இயலும். ஆகவேதான், பதினைந்து தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கோரியது. இது எமது தகுதிக்கு மீறியதாகவோ, அடாவடித்தனமான கோரிக்கையாகவோ யாரும் கருதிவிட இயலாது.

நாடுதழுவிய அளவில் 234 தொகுதிகளிலும் வாக்கு வங்கியைப் பெற்றுள்ளோம் என்பதைக் கடந்த 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் உறுதிப்படுத்தியிருக்கிறோம். ‘வட மாவட்டங்களில் மட்டும்’ அல்லது ‘மேற்கு’ அல்லது ‘தெற்கு மாவட்டங்களில் மட்டும்’ என்று ஒரு ‘பகுதி சார்ந்த’ கட்சியாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கட்சியாகவோ இல்லாமல், தமிழகம் தழுவிய அளவிலும் அனைத்துத்தரப்பு மக்களும் அங்கம் வகிக்கும் அளவிலும் வளர்ச்சியடைந்துள்ள அரசியல் கட்சியாகும் விடுதலைச் சிறுத்தைகள்.

அண்மையில், நடந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் 45 இலட்சத்திற்கும் மேலானவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். சுமார் இருபதாயிரத்துக்கும் மேலான கிளைகள் புதியதாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டமைப்புரீதியாக வலிமை பெற்றுள்ள, தீவிரமாக உழைக்கக்கூடிய களப்பணியாளர்களைக் கொண்டுள்ள கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், பத்து தொகுதிகளை மட்டுமே தி.மு.க கூட்டணியில் பெற முடிந்தது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் ஒரு ஏமாற்றமாகக் கருதுவதில் தவறேதும் இருக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நெருக்கடியான சூழல்களில் தி.மு.க-வுக்கு உற்றத்துணையாய் இருந்து, நம்பிக்கைக்குரிய தோழர்களாய் இருந்து வாதாடியவர்கள், போராடியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இதனால், கடுமையான விமர்சனங்களுக்கும் பொல்லாத வீண்பழிகளுக்கும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கயவர்களின் ஆதாரமில்லாத அவதூறுகளுக்கும் ஆளானவர்கள.இலாப-நட்டக் கணக்குப் பார்க்காமல், அரசியலில் நட்புக்கும் தோழமைக்கும் புதிய இலக்கணமாகச் செயலாற்றி வருபவர்கள்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க-விடம் தோழமையுடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதில் தவறென்ன இருக்கமுடியும்? எனினும், தற்போதுள்ள சூழலில் நடைமுறை சாத்தியக் கூறுகளைக் கணக்கில் கொண்டு, கூட்டணியிலுள்ள பிற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்கிற ஒப்புரவுப் பாங்கோடு, கூட்டணியின் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்கிற தோழமையுணர்வோடு, எமது எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அல்லது விட்டுக்கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.

‘நடுக்கண்டம் எனக்கு’ என்று அடம்பிடிக்கும் போக்கில்லாமல், மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துழைக்க வேண்டுமென்கிற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டுள்ளோம்! எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தி அணி மாறுவோமென திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளுக்கு மேலும் இடம் கொடுக்காமல் ‘அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளம் விடுதலைச் சிறுத்தைகள்’ என்று மீண்டும் நிலைநாட்டும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். இதில் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக எண்ணுவது நமது ஆளுமையின்மீது நாமே கறைபூசுவதாக அமைந்துவிடும்.

அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும், அழுத்தமாகவும், ஆழமாகவும் வேர் விட்டு வலிமையோடு வளர்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளின் தூய தொண்டுக்கும் நட்புறவில் காட்டும் நம்பகத்தன்மைக்கும் உரிய மதிப்பை, வெகுமதியை, பொதுமக்கள் வழங்குவார்கள். நாம் பெற்ற 10 தொகுதிகளையும் வெற்றிபெற வைப்பார்கள். அந்த நம்பிக்கையோடு களமிறங்குவோம். ‘நாம் இடம் பெற்றுள்ள தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது; தி.மு.க மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. என்கிற வரலாற்றுப் பதிவை இந்தத் தேர்தலில் உருவாக்குவோம்.

கூட்டணியின் ஒத்துழைப்போடும், பொதுமக்களின் நல்லாதரவோடும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றெடுப்போம். 2011-விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்பதை நிலைநாட்டுவோம். போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் 01.03.2011 முதல் 10.03.2011 வரை தலைமை அலுவலகத்தில் பெறப்படுகிறது. தவறாமல் விடுதலைச் சிறுத்தைகள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டுகிறோம்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பட்டது போதுமா ! பழ நெடுமாறா ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html - OK

மதுரை சரவணன் சொன்னது…

pathu thokuthikku naalla vilakkam.. ithu saathik katchi illangka....! pakirvukku nanri.vaalththukkal