வியாழன், 17 மார்ச், 2011

தொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:


இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவேண்டிய 12 தொகுதிகள் பற்றி ஏற்கனவே அளிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதொகுதிகளை ஒதுக்கீடு செய்வதோடு மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று வலியுறுத்தினோம்.
 
எங்கள் பொதுச் செயலாளரை சந்தித்து கலந்து ஆலோசித்துவிட்டு இன்று இரவே சி.பி.எம். அலுவலகத்திற்கு வந்து சி.பி.எம். பேச்சுவார்த்தைக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதாக அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர்கள் கூறினார்கள். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க. போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ல் வெற்றிபெற்ற 6 தொகுதிகளுக்கும், மேலும் சி.பி.எம். போட்டியிட விரும்பி அளித்துள்ள பட்டியலில் உள்ள பல தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க இயலாது.
 
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிற போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரும் தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறையல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதோடு அ.தி.மு.க. அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.


ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக நாளை (17.3.2011) சென்னையில், கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை: